இலங்கையில் 9 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தடுப்பூசியைப் பெறவில்லை – சுகாதார அதிகாரிகள்

இலங்கையில் 9 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸைக்கூட பெறவில்லை என சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே, 12 வயதுக்கு மேற்பட்ட 17.6 மில்லியன் மக்கள் தடுப்பூசியைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர் என்றும் எனினும் முதல் டோஸ் வழங்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை,நேற்றைய நிலைவரப்படி 16.7 மில்லியனாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம், 20 வயதுக்கு மேற்பட்ட 14.5 மில்லியன் மக்கள் பூஸ்டர் டோஸைப் பெற தகுதியுடையவர்கள் என்றும் எனினும் 6.6 மில்லியன் பேர் மட்டுமே பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

மக்கள் தற்போது கொரோனா வைரஸை மிகவும் இலகுவாக எடுத்துக்கொள்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 1.1 மில்லியன் நபர்கள் இன்னும் பூஸ்டர் டோஸைப் பெறவில்லை என்றும் அவர்கள்தான் பெரும்பாலும் சிக்கல்களுக்கு உள்ளாகுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.