சச்சின் பாராட்டிற்கு சிராஜ் அளித்த பதில்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக வலம்வரும் முகமது சிராஜ் பற்றிப் பேசிய சச்சின் டெண்டுல்கர், பார்க்கும்போதெல்லாம் புதுப்புது விஷயங்களை செய்து பவுலிங்கில் அசத்துகிறார். ஒருவேளை காலில் ஸ்பிங் எதாவது வைத்திருப்பாரோ என்னவோ? என்று இளம்வீரர் முகமது சிராஜ் குறித்து கடும் வியப்பை வெளியிட்டு இருந்தார்.

இந்தக் கருத்துக்கு பதிலளித்த முகமது சிராஜ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் உங்களுடைய வார்த்தைகளுக்கு நன்றி சார். உங்களிடமிருந்து இதுபோன்ற வார்த்தைகளை கேட்பது மேலும் என்னை ஊக்கப்படுத்துகிறது. என்னுடைய நாட்டுக்காக நான் எப்பொழுதும் என்னுடைய பெஸ்ட்டை வழங்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின்போது மெல்போர்ன் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமான முகமது சிராஜ் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்த அவர் அடுத்தடுத்து இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடிய இவர் தற்போது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியிலும் இடம்பெற்றுள்ளார்.

இந்தச் சுற்றுப்பயணத்தைக் குறித்து கருத்து தெரிவித்தபோதுதான் இந்தியக் கிரிக்கெட் அணியின் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர் முகமது சிராஜை பாராட்டியிருந்தார். அதில் தொடர்ச்சியாக ஓவர்களை கொடுத்தாலும் எவ்வித தடுமாற்றம் இல்லாமல் துல்லியமாக பந்துவீசி வியக்க வைக்கிறார். நான் அவருடைய ஆட்டத்தைப் பார்க்கும் போதெல்லாம் பந்துவீச்சில் புதிதாக எதாவது ஒன்றை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

ஒருவேளை சிராஜின் கால்களில் ஸ்பிங் இருக்குமோ என நினைக்க தோன்றியது. முழு எனர்ஜியுடன் இருக்கிறார். கடைசி ஓவரை வீச வந்தாலும்கூட முதல் ஓவரை வீசுவதுபோல் புத்துணர்ச்சியுடன் இருக்கிறார். சிராஜ் ஒரு முழுமையான பாஸ்ட் பௌலர். தென்னாப்பிரிக்க மண்ணிலும் அசத்தலாக செயல்படுவார் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியானது செஞ்சுரியனில் நடைபெற இருக்கிறது. இந்த மைதானத்தில் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று இருக்கின்றன. அதில் 21 போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றிப்பெற்றுள்ளது. மேலும் 3 போட்டிகளில் டிரா மற்றும் 2 போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா தோல்வி அடைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு டஃப்பான இந்த மைதானத்தில் இந்தியா இதுவரை 2 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. ஆனால் இரண்டிலும் தோல்வியைத்தான் தழுவியது. இதையடுத்து செஞ்சூரியனில் எப்படி விளையாடுவது என்பது குறித்தும் சச்சின் விளையாட்டு வீரர்களுக்கு டிப்ஸ்களையும் கொடுத்துள்ளார்.