இலங்கையை விட்டு வெளியேறிய இலட்சக்கணக்கானோர் -வெளியானது விபரம்


இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் பலர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு தேடி செல்கின்றனர்.

அதேநேரம் மேலும் சிலர் தமது உயிரைப் பணயம் வைத்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக படகுகளில் தமிழகத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை 150 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் 2 இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பினை பெற்று பல நாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருட இறுதிக்குள் குறித்த எண்ணிக்கை 3 இலட்சமாக அதிகரிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்று சென்றுள்ளவர்களில் 60 சதவீதமானவர்கள் ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் விசேட தகமைகள் எதனையும் கொள்ளாதவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.