உலகவாழ் மக்களின் துன்பங்கள் அகன்று இன்பங்கள் மிளிர tiktamil இன் தீபத்திரு நாள் வாழ்த்துகள்!


உலக வாழ் இந்துக்களால் வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி திருநாள் இன்று கொண்டாடப்படுகின்றது.

அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இம்மண்ணுலகில் இன்பங்கள் மிளிர வேண்டுமென tiktamil இன் வாசகர்களுக்கும், உலகத் தமிழர் அனைவருக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நரகாசுரனுக்கு அஞ்ஞானம் அகன்று மெய்ஞ்ஞானம் கிடைக்கப்பெற்றதை நினைவுகூரும் நோக்கில் தீபத்திருநாளன்று இல்லங்களும் கோவில்களும் அகல் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகை நாட்டின் பல பாகங்களிலும் களை கட்டியுள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் தலைநகர் கொழும்பிலும் இன்றைய தினம் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.

யாழ்ப்பாணத்தில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்ததுடன், இன்று காலையிலிருந்து மக்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

அதேபோல் வவுனியாவிலும் மக்கள் தமது துயரங்களை மறந்து கோவில்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். மன்னார்  திருக்கேதீஸ்வரத்தில் இன்று காலை இடம்பெற்ற தீபாவளி தினத்திற்கான விசேட பூஜைகளில் மக்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு, மகிழ்ச்சியுடன் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் வழிபாடுகள் இடம்பெற்றதுடன் அதிகளவு மக்கள் வழிபாடுகளிலும் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.