தேர்தல் பிரச்சாரமாகவும், அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் களமாகவும் மாறிய மே தினம்

சர்வதேச தொழிலாளர்  தினம் இன்றாகும்.  இதனை முன்னிட்டு ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி மே தினக் கூட்டத்தை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு காலிமுகத்திடலில் நடத்தியது.

நாட்டைக் கட்டியெழுப்பும் மக்கள் சக்தி அணிதிரளும் மேதினக் கூட்டம் எனும் தொனிப்பொருளிள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர்கள் உட்பட தேசிய மக்கள் சக்தி பிரமுகர்கள் இந்த கூட்டத்தில் உரையாற்றினர்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து மேதினக் கூட்டத்தையும், பேரணியையும் தலவாக்கலையில் நடத்தியது.

இதேநேரம் இலங்கையிலுள்ள பிரதான தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை பிரதான மேதினக் கூட்டத்தையோ அல்லது பேரணியையோ நடத்தவில்லை.

மே தினத்துக்காக செலவிடப்படும் பணம், தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்காக ஒதுக்கப்படும் என இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தொழிற்சங்கங்கள், வெகுஜன மற்றும் சிவில் அமைப்புகளுடன் இலங்கை ஆசிரியர் சங்கம் இணைந்து நடாத்திய கூட்டு மே தினம் பேரணி இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

 யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமான குறித்த பேரணி நகர் பகுதி ஊடாக பயணித்து யாழ்.பொது நூலகம் முன்பாக நிறைவுபெற்றது.

பேரணியில், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரி! அதிபர்,ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்களின் சம்பள முரண்பாட்டை உடணடியாக நீக்கு! மலையகத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்கு! கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்கு! விவசாயிகள் எதிர்நோக்கும் உற்பத்தி, சந்தைப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கு! உள்ளிட்ட சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

‘ஏமாந்தது போதும், தற்போது விழித்தெழுவோம்” எனும் தொனிப்பொருளின்கீழ் மொட்டு கட்சி, நுகோகொடையில் மே தினக் கூட்டத்தை நடத்தியது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியான மருதானையில் உள்ள கட்சி தலைமையகத்தில் மே தினக் கூட்டத்தை நடத்தியது.

முன்னிலை சோஷலிசக் கட்சியின் மே தினக் கூட்டம் கிருளப்பனையில் நடைபெற்றது.

மே 6 ஆம் திகதி உள்ளுராட்சிசபைத் தேர்தல் என்பதால் தமக்கான பலத்தை வெளிப்படுத்தும் விதத்தில் மே தினக் கூட்டத்தையும், பேரணியையும் கட்சிகள் பயன்படுத்தியுள்ளன. அதேபோல தேர்தல் பிரச்சாரக் கூட்டமாகவும் அவை மாறியிருந்தன.