மாவீரர் துயிலும் இல்ல துப்பரவு பணி - மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட இராணுவத்தால் முறுகல் நிலை!


முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் மேற்கொள்ள சென்றவர்களை சிறிலங்கா இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால் குறித்த பகுதியில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

எதிர்வரும் 21 ஆம் திகதி மாவீரர் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் துயிலும் இல்லங்களை சிரமதானம் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தை இன்றைய தினம் சிரமதானம் செய்வதற்காக மக்கள் சென்ற போது அப்பணியை செய்ய விடாது சிறிலங்கா இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால் சிரமதானம் செய்யச் சென்ற மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை, சிரமதானம் செய்யச் சென்ற மக்களளை இராணுவத்தினர் புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து அச்சறுத்தும் வகையிலும் நடந்துகொண்டுள்ளனர்.