லங்கா ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகள் இரத்துச் செய்யப்பட்டதையடுத்து, அந்த அணி புதிய உரிமையாளர் ஒருவருக்கு கைமாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் பணிப்பாளர் சமந்த தொடம்வல இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி புதிய உரிமையாளர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் எனக் கூறப்படும் பங்களாதேஷைச் சேர்ந்த தமீம் ரஹ்மான் நேற்று கைது செய்யப்பட்டார்.
அத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குற்றமொன்றுக்கு அமைவாக விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடை காரணமாக அவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்றைய தினம் தடுத்து வைக்கப்பட்டார்.
பின்னர் விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட பிரிவினரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் லங்கா ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து தம்புள்ள தண்டர்ஸ் அணியின் உரிமைகள் இரத்துச் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.