மாத்தளை, ரத்வத்த தோட்ட விவகாரம் : பாராளுமன்றில் வெடித்தது சர்ச்சை : பின்னணியில் எம்.பி. ஒருவர் என தகவல்


மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் தோட்ட முகாமையாளரினால் தொழிலாளர்களின் வீடு அடித்து நொறுக்கப்பட்டமைக்கு, இன்று பாராளுமன்றில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதற்கு முன்னரே, மனோ கணேசன், இராதாகிருஸ்ணன், வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட உறுப்பினர்கள் இணைந்து, மாத்தளை- ரத்வத்த தோட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்திற்கு எதிர்ப்பினை வெளியிட்டு கோஷமெழுப்பினர்.

குறித்த தோட்டத்தில் அமைந்துள்ள வீட்டை அடித்து நொறுக்கிய தோட்ட உதவி முகாமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சபையில் இவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, சபாநாயகர் அவர்களை அமைதியாக இருக்குமாறு பல தடவைகள் கேட்டுக்கொண்ட போதிலும், தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிடப்பட்டமையால் சபையில் சிறுது நேரம் பதற்றமானதொரு சூழலும் ஏற்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,

மாத்தளை, எல்கடுவ, ரத்வத்த பகுதியில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் வசித்த தற்காலிக வீட்டை, அத்தோட்ட உதவி முகாமையாளர் தனது அடாவடிக் கும்பலுடன் சேர்ந்துவந்து, அடித்து நொறுக்கியுள்ளார்.

இது அரச நிலத்தில் இடம்பெற்றுள்ள ஒரு அசம்பாவித சம்பவமாகும். இந்த அநீதிக்கு அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும்.

அமைச்சர் அங்கு சென்று, நடிப்பது முக்கியமல்ல. இந்த அரசாங்கமானது மலைநாட்டு மக்களுக்கு எவ்வாறு செயற்படுகிறது என்பதை இந்த சம்பவத்தின் ஊடாக தெரிந்துக் கொள்ள முடிந்துள்ளது.

இந்த மக்களை அச்சுறுத்திய, அவர்களின் வீடுகளை அடித்து நொறுக்கிய அந்த அதிகாரி பாராளுமன்றுக்கு பதில் கூற வேண்டும்.

பெருந்தோட்ட மக்களின் வியர்வையால்தான் எமது நாட்டுக்கு டொலர் கிடைக்கிறது.

அம்மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக, ஆளும் தரப்பினர் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

இந்த சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்” என்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கருத்து தெரிவிக்கையில்,

ஆனால் இந்த சம்பவத்தின் பின்னணியில் எதிர்க்கட்சியின் ஒரு உறுப்பினர் உள்ளார் என்று தகவல் வந்துள்ளது.

எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

இதன்போது எழுந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

மாத்தளை விவகாரத்தில் தான் செயற்பட்டது ஆதங்கமே தவிர அரசியலை நோக்கமில்லை .

எதிர்க்கட்சியிலுள்ள மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரும் முன்வந்து ஒத்துழைத்தால் நாம் முன்னோக்கி நகர முடியும் என்றும் என்றார்.