தளபாடம் உற்பத்தி நிலையத்தில் சூட்சுமமாக நடத்தப்பட்ட பாரிய மோசடி : புத்தளத்தில் சம்பவம்


 

 
திருடப்பட்ட மோட்டார் சைக்கிளின் உதிரிபாகங்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த தளபாடம் உற்பத்தி செய்யும் இடமொன்று புத்தளம் மணற்குன்று பகுதியில் பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
 
புத்தளம் வேப்பமடு பகுதியில் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நவீன மோட்டார் சைக்கிள் கடந்த 10 ஆம் திகதி திருடப்பட்டது.

இதனையடுத்து மோட்டார் சைக்கிள் உரிமையாளர் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமரா காட்சிகளின் அடிப்படையில், பொதுமக்களின் உதவியுடன், மோட்டார் சைக்கிளை திருடிய சந்தேக நபர் நேற்று மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

 சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் மோட்டார் சைக்கிளைத் திருடி மணற்குன்று பகுதியில் உள்ள தளபாடம் உற்பத்தி செய்யும் இடத்தில் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பொலிஸார் தளபாடம் உற்பத்தி செய்யும் குறித்த இடத்தை சுற்றிவளைத்த போது, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் இருப்பதைக் கண்டுப்பிடித்துள்ளனர்.

தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டபோது, குறித்த தளபாடம் செய்யும் இடத்தில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் திருத்தும் பணிகள் இடம்பெற்று வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் மோட்டார் சைக்கிள்களின் உதிரிப்பாகங்களை கழற்றி விற்பனையில் ஈடுப்பட்டு வந்திருக்கலாமென சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் பல இடங்களில் இருந்து திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும்  மோட்டார் சைக்கிள்களின் பாகங்கள் மற்றுமு; இலக்க தகடுகளையும்  கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.