பொலிஸாரின் பாதுகாப்புடன் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படும் பாரிய குற்றச் செயல் : கமராவில் சிக்கிய ஆதாரம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநகரி குடமுருட்டி முட்கொம்பன் ஆகிய பகுதிகளில் பொலிஸாரின் உதவியுடன், சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெறுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கிளிநொச்சி பூநகரி குடமுருட்டி முட்கொம்பன் குஞ்சுப்பரந்தன் நீவில்  ஆகிய பகுதிகளில் வயல் நிலங்கள் மற்றும் கடற்கரையோரப்  பகுதிகள் என்பவற்றில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வுகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனை தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் மற்றும் பொது அமைப்பினர் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 03ம் திகதி  மற்றும் ஜூன் மாதம் முதலாம் திகதி  மற்றும் ஜூன் 13ஆம் திகதி ஆகிய நாட்களில்  நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் இந்த விடயம் தொடர்பாக நீண்ட நேரமாக விவாதத்தில் ஈடுபட்டு பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன

ஆனாலும் இந்த தீர்மானங்கள் எல்லாவற்றையும் மீறி கிளிநொச்சி மற்றம் பூநகரி பொலிசாரின் முழுமையான ஆதரவுடனும் பாதுகாப்புடனும் நாளாந்தம் சட்டவிரோதமான முறையில் 40 முதல் 55 கியூப் மணல் அகழ்ந்தெடுக்கப்பட்டு டிப்பர் வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

நேற்றைய தினம் பகல் பூநகரி போலீஸ் நிலையத்திற்கு சொந்தமான முச்சக்கர வண்டி ஒன்றில் குறித்த பகுதிக்கு வந்த மூன்று பொலிசார் குறித்த பகுதியில் சட்டவிரோத  மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு டிப்பர் வாகனங்களை பாதுகாப்பாக குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் இருந்து  பாதுகாப்பாக பிரதான வீதிக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக வழியனுப்பிருந்த காட்சிகள் எமது கமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தன.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க வேண்டிய பொலிஸாரே அவர்களுடன் கூட்டிணைந்து செயற்படுவது கவலையை ஏற்படுத்தியுள்ளது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.