இலங்கையில் பலருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் : முற்றாக ஒழிக்கும் முயற்சியில் கொழும்பு ரோட்டரி கழகம்

 
கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இலங்கையில் பலர் பாதிப்படைந்துள்ளனர் என டில்மா தலைவரும் எம்.ஜே.எப். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான டில்ஹான் சி. பெர்னாண்டோ தெரிவித்தார்.


கர்ப்பப்பை வாய் புற்று நோயை தடுப்பதற்காக  சுகாதார அமைச்சு, கொழும்பு ரோட்டரி கழகம் மற்றும் டில்மா ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பாக தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்ற போதே இதனைத் தெரிவித்த அவர்,
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகுதல் மூலமே தீவிரமடைந்து வருகின்றது.  இதனை எதிர்காலத்தில் முற்றாக ஒழிப்பதற்கான முயற்சிகளில் தற்போது நாம் இணைந்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.
 

இங்கு கருத்து தெரிவித்த குடும்ப நலப் பணியகத்தின் சமூக மருத்துவ ஆலோசகர் வைத்தியர் நதீஜா  

“ இலங்கையில் ஆண்டுதோறும் 1500 ற்கும் மேற்பட்ட பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றார்கள். இந்நோயினால் பாதிக்கப்பட்ட பெண்கள் முகங்கொடுக்கும் மிகப்பெரிய சவாலாக நோயின் ஆரம்ப கட்டத்தை கண்டறியமுடியாத நிலையில் இருப்பதே ஆகும். 50 வீதமான பெண்கள் நோயின் முதிர்ச்சி நிலையிலேயே நோயின் தன்மையை கண்டறிந்து கொள்கின்றார்கள். இதனால் 700 ற்கும் மேற்பட்ட மரணங்கள் சம்பவிக்கின்றன. இதனை கண்டறிந்த கொழும்பு ரோட்டரிக் கழகம் இலங்கை அரசாங்கத்தினுடன் இணைந்து இந்த பொது சுகாதார பிரச்சினையான கர்ப்பப்பை வாய் புற்றுநோயினை எதிர்கொள்ளவும் இந்த நோயை 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் இருந்து முற்றுமுழுதாக ஒழிக்கவும் ஒரு தொலை நோக்கு இலட்சியத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேநேரம் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் ஆலோசகர் சமூக மருத்துவர் வைத்தியர் ஹசரலி பெர்ணான்டோ தெரிவிக்கையில்,


கர்ப்பப்பை வாய் புற்றுநோயானது, குணப்படுத்த முடியாத நோயல்ல. இதற்கான தீர்வினை சிகிச்சைகள் மூலம் பெற்றுகொள்ள முடியும். ஆனால் இந்த நோய்க்கான அறிகுறியை இறுதி நிலையில் அறிந்து கொள்ளக்கூடியது சற்று சவாலான விடயமாக உள்ளது. 35 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்களே அதிகமாக இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந் நோயினை தடுப்பதற்காக பிரதான வழிமுறைகளாக, பாடசாலை மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் 35 முதல் 45  வயதிற்குட்பட்ட பெண்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் ஆகும் எனத் தெரிவித்தார்.