பாராளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சக ஜனநாயக நாடாக இந்தியா, இந்த மக்கள் ஆணையினை வரவேற்பதாகவும், மக்களின் நலன்களுக்காக இருதரப்பு உறவினை மேலும் வலுவாக்க உறுதி கொண்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்பை முன்னேற்றுவதற்கும் இலங்கையின் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த விடயம் பகிரப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக இலங்கையிலுள்ள ஜப்பானியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையுடனான ஆழமான நம்பிக்கை மற்றும் நட்பைத் தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜப்பானியத் தூதுவர் அக்கியோ இசோமாடா தெரிவித்துள்ளார்.
இதேநேரம் பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கட்சி அமோக வெற்றியீட்டியமைக்காக பாக்கிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷரீப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரவின் தொலைநோக்கு மற்றும் தலைமைத்துவத்தின் மீது இலங்கை மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் நம்பிக்கைக்கு இது ஒரு சான்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரஸ்பர மரியாதை, பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் ஒத்துழைப்பின் நீண்ட வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இலங்கையுடனான தனது நெருக்கமான மற்றும் நீண்டகால உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் ஷெபாஷ் ஷரீப் குறிப்பிட்டுள்ளார்.
அவரது வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இரு நாட்டு மக்களுக்கும் இடையே உள்ள நெருங்கிய மற்றும் நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்த எமது அரசாங்கம் பாகிஸ்தானுடன் தொடர்ந்து பணியாற்றும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.