மன்னார் இரட்டை படுகொலை! 20 பேரை விளக்கமறியல் வைக்க உத்தரவு

மன்னார் நொச்சிக்குளம் இரட்டை படுகொலை தொடர்பாக சரணடைந்த 20 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை (30-09-2022) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று (16) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த 20 சந்தேக நபர்களும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (16) மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது குறித்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் சம்பவ இடத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட சான்று பொருட்களான இரத்த மாதிரி, இரண்டு கோடாரிகளை பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப காவல்துறையினர் மன்றில் அனுமதி கோரிய போது மன்றினால் அது குறித்த கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

இதன் போது காவல்துறை அதிகாரி ஒருவரை நியமித்து,குறித்த சான்று பொருட்களையும் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் சந்தேக நபர்கள் 20 பேரையும் இம்மாதம் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி மன்னார் நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், உயிலங்குளம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் உயிலங்குளம்,மற்றும் தலை மன்னார் காவல்துறை உத்தியோகத்தர்கள், மன்னார் குற்றத்தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.