வயல்வெளியில் காவலில் ஈடுபட்டிருந்த நபரை, சுமார் 50க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றிவளைத்து தாக்க முற்பட்டபோது வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் போராட்டத்துடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.
சுமார் 50 க்கும் அதிகமான யானைகள் வயல் அறுவடையின் பின்னர் மாவடிப்பள்ளி பகுதியில் உட்புகுந்து அங்கு புதிதாக முளைத்துள்ள புற்களை உண்டு வருவதுடன் சட்டவிரோதமான குப்பைக்கூளங்களும் நாடி வயல் வெளிகளில் நடமாடிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சம்பவ தினம் மாலை அறுவடை செய்யப்பட்ட வயல்வெளியில் மாடுகளை மேய்ப்பதற்காக காவலுக்கு சென்ற நபரை திடீரென அங்கு சென்ற யானைகள் சுற்றி வளைத்ததுடன் குறித்த நபரை தாக்க முயன்றுள்ளன.
உடனடியாக துரிதமாக செயற்பட்ட அந்நபர் அருகில் உள்ள உயரமான இடமொன்றில் ஏறியுள்ளார். எனினும் குறித்த நபரை விடாது துரத்திய யானைகள் தாக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
தகவல் அறிந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வெடி பொருட்களை பாவித்து யானைக் கூட்டத்தை பின்வாங்க செய்ததுடன் யானை தாக்குதல் ஆபத்தில் இருந்த நபரையும் மீட்டுள்ளனர்.
தற்போது இப்பகுதியில் சுமார் 200 க்கும் அதிகமான யானைகள் உள்ளதுடன் அவை, பொதுமக்களின் உடமைகளுக்கு சேதம் விளைவித்து வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.