கட்டாயமாக அனைவரும் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்வும் – Dr கு.சுகுணன்

மூன்றாவது தடுப்பூசியுடன் கொவிட் நிலைமை கட்டுப்பாட்டுக்கு வருவதான அனுகூலமான நிலைமையுள்ளதன் காரணமாக அனைவரையும் கட்டாயும் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூன்றாவது தடுப்பூசியைப்பெற்றுக்கொள்ளாதவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தக்கூடிய நிலையும் உள்ளதாகவும் அதனை தவிர்த்துக்கொள்ள அனைவரையும் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளுமாறும் தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட வரிசைகளில் நின்று மூன்றாவது தடுப்பூசியைப்பெற்றுக்கொள்ளும் வகையில் பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துவருகின்றது.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள கிராமங்களில் மூன்றாவது தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளாதவர்கள் மற்றும் முதலாம் இரண்டாம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணனின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதனின் தலைமையில் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

இதன்கீழ் கொக்குவில்,திராய்மடு,பனிச்சையடி,ஊறணி ஆகிய பகுதி மக்களுக்காக கொக்குவில் பாடசாலையில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த தடுப்பூசி ஏற்றும் பணிகளை பொதுச்சுகாதார பரிசோதகர் மணிமாறன் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்தனர்.

இதன்போது பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தமது தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்வதில் ஆர்வம் செலுத்தியதை காணமுடிந்தது.