ஜனாதிபதி வேட்பாளர்கள் சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் உறுதிமொழியை வழங்க வேண்டும்:சுதந்திரக்கட்சி

வெற்றிடமாக உள்ள ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் நாட்டில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பிலான தமது வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஒரு வேட்பாளர் முன்வந்து தனது வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும்

ஜனநாயக வரையறைக்குள் நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு ஒரு வேட்பாளர் முன்வந்து, தனது கொள்கை வேலைத்திட்டங்கள் தொடர்பில் நாங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தெளிவான அறிக்கையை எமக்கு வழங்க வேண்டும்.

அவர் ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர் அரசியலமைப்புக்கு உட்பட்டு சட்டத்திட்டங்களுக்கு அமைய சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான உறுதிமொழியை வழங்க வேண்டும்.

மக்கள் அடைந்துள்ள கஷ்டமான நிலைமையில் இருந்து அவர்களை காப்பாற்றி, மீட்டெடுப்பது தொடர்பான வேலைத்திட்டங்கள் என்ன என்பதை முன்வைக்க வேண்டும்.

உணவு, மருந்து, எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் பசளை, கமத்தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் என அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான அவரது வேலைத்திட்டம் என்ன என்பது குறித்து தெளிவுப்படுத்த வேண்டும்.

அப்படி தெளிவுப்படுத்தவில்லை என்றால், போட்டியிட முன்வந்துள்ள வேட்பாளர்கள் கலந்துரையாடி மக்களுக்காக ஓரிடத்திற்கு வர முடியவில்லை என்றால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்த வேட்பாளருக்கும் வாக்கை அளிக்காது என்பதை தெளிவாக கூற வேண்டும்.

நாங்கள் முழுமையாக வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை நிராகரிப்போம் எனவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். 

எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.  ஜனாதிபதி பதவிக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனுரகுமார திஸாநாயக்க, சஜித் பிரேமதாச, டளஸ் அழகப்பெரும, சரத் பொன்சேகா ஆகியோர் போட்டியிட உள்ளனர்.