ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களுக்கு சவாலாக அமையப் போகும் மைத்திரி

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஏனைய வேட்பாளர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena)  சவாலாக அமையப் போகின்றார் என்று மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

பெல்லன்வில பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்  பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இந்த நாட்டில் இருக்கும் பழமை வாய்ந்த கட்சி. நாடு அரசியல் ரீதியில் தற்போது நெருக்கடி நிலையில் இருப்பதால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு பாரிய சவாலாக அமையும்.

அதனால் பிரதான கட்சிகள் தற்போது கூட்டணி அமைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைக்க பல தரப்பினர் முன்வந்திருக்கின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டால் எதிர்வரும் மே முதலாம் திகதி இடம்பெறும் கட்சியின் மேதின கூட்டத்தின்போது கட்சியின் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிப்பாேம்.

ஜனாதிபதி தேர்தல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டு என்னவாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள பிரதான கட்சிகள் மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மிகவும் சவாலாக இருந்து வருவதே அதற்கு காரணமாகும்.

அதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்தி, கட்சியை பிளவு படுத்துவதற்கு பல்வேறு சதித்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

எந்த சதித்திட்டங்களை மேற்கொண்டாலும் கட்சி ஆதரவாளர்கள் கட்சியுடன் மிகவும் உறுதியாக இருக்கின்றனர்.

எனவே ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டால் அது தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை நாங்கள் அறிவிப்போம். சில சந்தர்ப்பங்களில் கட்சி சார்பாக வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பாகவும் ஆலாேசித்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.