பிரபல வர்த்தகரிடம் 100 மில்லியன் பேரம் பேசிய மைத்திரி : பரபரப்பு தகவல் வெளியானது

 
ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரிடம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஏலம் விடுவதற்கு 100 மில்லியன் பேரம் பேசியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

விவசாய அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர்,

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென நிறைவேற்றுக்குழு கூட்டப்பட்டது. எமக்கு அழைப்பு வரும் போது செல்லவதற்கான நேரம் கூட இல்லை.
 
அத்தோடு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 செயலாளருக்கும் அந்த தடையுத்தரவு பொறுந்தும் என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிறைவேற்றுக்குழுவை கூட்ட முடியாது.

குண்டர்கள் கூட்டத்தைக் கூட்டி இடம்பெற்ற நிறைவேற்றுக்குழு சட்டத்துக்கு முரணானதாகும்.
 
அத்தோடு அதில் பங்கேற்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிகாரம் இல்லை. நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலேயே அவர் செயற்பட்டிருக்கின்றார்.
 
பதில் செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவும் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்டுள்ளமைக்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களே இதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
 
பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. முன்னாள் அமைச்சர் திலங்க சுமதிபால ஆட்சேபனையை வெளிப்படுத்திய போது அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஏலம் போடுகின்றார்.
 
தற்போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள நாட்டிலுள்ள பிரபல வர்த்தகரொருவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார். அவரிடம் 100 மில்லியன் ரூபாவைக் கோரியுள்ளார். எனினும் குறித்த வர்த்தகர் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் நாம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வினவிய போது, அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
 
அவர் தனது பாதுகாப்புக்காகவும் பணத்தேவைக்காகவும் சுதந்திர கட்சியை உபயோப்பதாக இருந்தால் அது எந்தளவு அநீதியாகும்?
சுதந்திர கட்சியிலுள்ள அமைச்சர்கள் சரியானவர்கள் அல்ல.

 ஆனால் அரசாங்கத்திலுள்ள சு.க.வின் உறுப்புரிமை கூட இல்லாத அமைச்சர் மாத்திரம் பொறுத்தமானரவா? இவரது பெயரைப் பரிந்துரைப்பதற்கு பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாசவுக்கு எவ்வளவு கிடைத்தது? என்றார்.