மாலைத்தீவு முன்னாள் அதிபரும் நாடாளுமன்ற சபாநாயகருமான மொஹமட் நஷீத் சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்க முன்வந்ததாக மாலைத்தீவின் The Maldives Journal என்ற சஞ்சிகை தெரிவித்துள்ளது.
நஷீத் தற்போது சிறிலங்காவில் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். இந்தநிலையில், உயர்மட்ட அரசியல் பிரமுகர்களுடன் பல சந்திப்புகளை நடத்தி, ராஜபக்ச குடும்பத்தை மாலைத்தீவுக்கு செல்வதற்கு பாதுகாப்பான வழியில் அனுமதிப்பதற்காக அவர்களை நஷீத் வலியுறுத்தினார் என்று அந்த சஞ்சிகை தெரிவித்துள்ளது.
பதவி விலகிய பின்னர் மகிந்த ராஜபக்ச, நஷீத்தை அழைத்த விடயத்தை, மாலைதீவு அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த அழைப்பில், இலங்கையில் நிலைமை சீராகும் வரை தனது குடும்பத்தினர் மாலைத்தீவில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு நஷீத்திடம் மகிந்த கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைதீவு சுற்றுலா அதிபரான சம்பா முஹம்மது மூசாவின் இடம் ஒன்றில் தனது குடும்பத்தை குடியமர்த்தும் திட்டத்தை மகிந்த ஆரம்பத்தில் எண்ணியிருந்தார் என்றும் மூசா ஏற்கனவே ராஜபக்சக்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் மூசா ஒரு நம்பமுடியாத ஒருவர் என்று குறிப்பிட்டு நஷீத் அந்த யோசனையை நிராகரித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக, இந்தியாவின் சோனு ஷிவ்தாசானிக்கு சொந்தமான இடம் ஒன்றில் ராஜபக்ச ஒரு தனிப்பட்ட குடியிருப்பை கொள்வனவு செய்ய வேண்டும் என்று நஷீத் முன்மொழிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனு என்பவர் நஷீத்தின் நெருங்கிய நண்பராவார். ஷிவ்தாசானி இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளார்.
இந்தநிலையில் சோனு ஷிவ்தாசானி ராஜபக்ச குடும்பத்திற்கு ஒரு தனி இல்லத்தை 12 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டதாக மாலைத்தீவின் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்த செயதியை சோனு ஷிவ்தாசானி மறுத்துள்ளார். சபாநாயகர் நஷீத் கடந்த வாரம் சிறிலங்காவிற்கு விஜயம் செய்த போது வெளிநாடுகளிடம் இருந்து நிவாரணம் பெறுவதற்கு சிறிலங்காவிற்கு உதவ நஷீத் முன்வந்ததாக சிறிலங்கா பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
அதன் பின்னர், நஷீட், முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபகச மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருடன் சந்திப்புகளை நடத்தியுள்ளார்.
ஒவ்வொரு சந்திப்பிலும், நஷீத், ராஜபக்சவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பான வழியை தேடித்தருவதற்கு வலியுறுத்தினார் என்று மாலைத்தீவின் சஞ்சிகை கூறியுள்ளது. மேலும் சஜித் பிரேமதாசாவுடனான சந்திப்பின்போது, பழிவாங்குவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நீதிமன்றம் ராஜபக்சவுக்கு பயணத் தடையை விதிக்கப்பட்டுள்ளது. ராஜபக்சர்களை நாட்டை விட்டு வெளியேறும் வகையில் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதும் நஷீத்தின் பணிகளில் ஒன்றாக உள்ளது.
இந்நிலையில், தமக்கு ஏற்படுத்தி தரும் பாதுகாப்பான இடத்துக்கு ஈடாக நஷீத்தின் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் நிதியளிப்பதற்கும் மகிந்த ஒப்புக்கொண்டதாக மாலைத்தீவின் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை மாலைத்தீவு சஞ்சிகையில் வெளியாகியுள்ள இந்த தகவல்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தரப்பு இதுவரை எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            