பிளவுபட்டது மஹிந்த அணி, ரணில் பக்கம் தாவிய மொட்டு கட்சியினர், : மிகப்பெரிய தவறை ரணில் செய்து விட்டார் என பசில் குற்றச்சாட்டு



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொட்டு சின்னத்தில் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அக் கட்சியின் பாராளுமன்ற ஊறுப்பினர்கள் பலர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், திலும் அமுனுகம, அனுப பஸ்குவல், கீதா குமாரசிங்க, அஜித் ராஜபக்ஷ, எஸ்.பி.திஸாநாயக்க, பிரேம்நாத் சி தொலவத்த, காஞ்சன விஜேசேகர உள்ளிட்ட எம்.பி.க்களும் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.


இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டக் குழுக் கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.


மொட்டு சின்னத்தில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டும் என நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


எவ்வாறிருப்பினும் அந்த தீர்மானத்துக்கு எதிராக 11 எம்.பி.க்கள் தமது வாக்குகளை அளித்திருந்தனர்.


இந்நிலையில் நேற்று இரவு மேற்குறிப்பிட்ட எம்.பி.க்கள் கொழும்பில் கூடி தமது நிலைப்பாடு தொடர்பில் கலந்தாலோசித்துள்ளனர்.

அதற்கமைய பெரும்பான்மை உறுப்பினர்களின் நிலைப்பாடுகளை ஏற்காமல் பொதுஜன பெரமுன வேட்பாளரைக் களமிறக்குவதற்கு தீர்மானித்துள்ளதால், தாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்காவிடின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெறுவார் என எஸ்.பி.திசநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாகவும் அதன் பின்னர் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிப்பதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன  தீர்மானித்துள்ள போதிலும் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கப்போவதாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன  கட்சியின் இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன எவ்வாறான தீர்மானத்தை எடுத்திருந்தாலும் சரி, கட்சியின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நான் ஜனாதிபதிக்கு எதிர்வரும் தேர்தலில் ஆதரவளிப்பேன், நாட்டை மிக முக்கியமான தருணத்தில் காப்பாற்றியவர் அவர் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் அவர் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்துள்ளமை முற்றிலும் தவறானது பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு எவ்வித நிபந்தனைகளுமின்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினோம். ஆனால் கடந்த 2 ஆண்டுகாலமாக அவர் பொதுஜன பெரமுனவின் கட்சிக்கு முன்னுரிமை வழங்கவில்லை.

மாறாக வீழ்ச்சியடைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியை எமது ஆதரவை கொண்டு பலப்படுத்தி பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தவே முயற்சிக்கிறார். இதற்கு இடமளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.