மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிககை எடுக்க உள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் அவரது ஊழியர்கள் குழுவின் தலைமை அதிகாரியுமான யோஷித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க நேற்று கொழும்பில் தன்னை குறித்து சுமத்திய குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதுடன் மக்களை தவறாக வழிநடத்தும் செயல் என யோஷித ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இதன் மூலம் தனக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயருக்காக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணிகளுக்கு ஆலோசனை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள தகவல்களை அருவருப்புடன் கண்டிப்பதாகவும் யோஷித்த ராஜபக்ச மேலும் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று அரசியல்வாதிகள், அவர்களை சார்ந்தவர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊழல் மோசடிகள் தொடர்பான கோப்புகளை அம்பலப்படுத்திய அநுரகுமார திஸாநாயக்க, யோஷித்த ராஜபக்சவுக்கு சொந்தமாக பல இடங்களில் பல கோடி ரூபாய் பெறுமதியான காணிகள் மற்றும் சொத்துக்கள் இருப்பதாக கூறியிருந்தார்.
அதற்கான ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
------------
யோஷித ராஜபக்ஷவிற்கும் பல சொத்துக்கள்: அம்பலப்படுத்திய அனுர
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான சொத்துக்கள் பற்றிய தகவல்களையும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று அம்பலப்படுத்தியிருந்தார்.
பிரதமர் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமாக ஹம்பாந்தோட்டை உள்ள சிறிபோபுர காட்டுப்பகுதியில் தலா 1.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 காணிகள் தொடர்பான உறுதிப் பத்திரத்தை அவர் அமபலப்படுத்தியுள்ளார்.
மேலும் 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான நேரடி ஒளிபரப்பு வாகனம், பத்தரமுல்லையில் சி.எஸ்.என் வலையமைப்பின் 200 மில்லியன் ரூபாய் கட்டிடமும் அவரது பெயரில் இருப்பதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு பத்தரமுல்லையில் உள்ள 235 மில்லியன் மதிப்புடைய கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் வலையமைப்பு, 138 மில்லியன் பெறுமதியான நுகேகொடையில் அமைந்துள்ள காணி மற்றும் கட்டிடம் குறித்தும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் ராஜபக்ச அறக்கட்டளைக்கு தொண்டு நிறுவனத்திற்கு என மாற்றப்பட்ட காணியில் எவ்வாறு தொலைக்காட்சி நிலையத்தை நடத்தி முடித்தது என்றும் அனுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பினார்.
இந்நிலையில் பிரதமர் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமாக பல காணிகள் இருப்பதாக அனுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட தகவல் தொடர்பாக பிரதமர் அலுவலகம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
மேலும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            