சுழற்சி முறையில் போராட்டத்தில் குதித்த மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்கள்

மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத் தரக் கூறி சுழற்சி முறையிலான போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக இன்று காலை 9 மணி முதல் குறித்த எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய முன்தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விவசாய கூட்டத்தின் போது மேச்சல் தரை தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜ தெரிவித்ததை அடுத்து தங்களது மேய்ச்சல் தரைகளை மீட்டுத் தரக் கூறி போராடி வருகின்றனர்.

இலங்கையில் மாத்திரமில்லாது சர்வதேச ரீதியாகவும் இன்று பேசு பொருளாக மாறியுள்ள கால்நடைகளின் மேய்ச்சல் தரை விவகாரம் பெரும் சூடு பிடித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பல மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்த போதிலும் எந்த தீர்மானமும் நடைமுறைப்படுத்தப்படாமல் போய் உள்ளதாக பண்ணையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அத்து மீறிய பெரும்பான்மை இனத்தவரின் குடியேற்றம் காரணமாக பெருமளவில் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பால் ஏற்றுமதியிலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

பெரும்பான்மை இனத்தவர்களை மேய்ச்சல் தரைகளாக காணப்படும் பகுதிகளில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைச்சர்களும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் அவர்களுக்கு பக்க பலமாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இன்று பண்ணையாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட குறித்து சுழற்சி முறையிலான போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்க உள்ளதாகவும் இதற்கான தீர்வு கிட்டாத பட்சத்தில் கால்நடைகளைக் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை முற்றுகையிடவுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

குறித்த கால்நடை விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இன்றைய சுழற்சி முறையிலான போராட்டத்தின் போது குறித்த இடத்துக்கு விஜயம் செய்த மட்டக்களப்பும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் அவரிடமும் மகஜர் ஒன்றையும் சமர்ப்பித்துள்ளனர்.