இந்திய கடன் வசதியில் கொண்டுவரப்பட்ட M11 ரயில் என்ஜின்கள் பழுதடைந்த நிலையில் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்


இந்திய கடன் வசதி மூலம் 2019 ஆம் ஆண்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 3,825 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள ஐந்து M11 ரயில் என்ஜின்கள், இரத்மலானை இரயில்வே பணிமனையில் பழுதடைந்த நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வெஞ்ஜின்கள் இலங்கை ரயில் பாதைகளுக்குப் பொருத்தமற்றவையாக இருப்பதுடன், அவை சரியான தொழில்நுட்ப மதிப்பீடு இன்றி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ரயில் என்ஜின்கள் இலங்கையில் 5 ஆண்டுகளாக இருப்பினும், அவற்றின் தொழில்நுட்ப ஒத்திசைவற்ற கொள்முதல் தொடர்பாகப் பொறுப்பு எவருக்கு என்பதை விசாரிக்க எந்த ஒரு அதிகாரப்பூர்வ விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.

தேசிய கணக்காய்வாளர் அலுவலகத்தின்  அண்மை ஆய்வு அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டு 765 மில்லியன் ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட 10 M11 ரயில் என்ஜின்களில் ஐந்து பழுதடைந்து சேவையில் இருந்து நீக்கப்பட்டு இரத்மலானை பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளன.

முன்னர் வாங்கப்பட்ட M வகை ரயில்கள் நல்ல செயல்திறன் காட்டியிருந்த போதிலும், அண்மை காலத்தில் வாங்கப்பட்ட M11 ரயில்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் இறுதி வரை இலங்கை ரயில்வே துறையின் 103 M வகை என்ஜின்களும், 133 S வகை என்ஜின்களும் சேவையில் இருந்தன. ஆனால் 47 M வகை என்ஜின்களும், 31 S வகை என்ஜின்களும் பழுதடைந்து சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

  M வகை ரயில்கள் 15 மில்லியன் ரூபாயிலிருந்து 765 மில்லியன் ரூபாய் வரையிலான விலை வித்தியாசத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், S வகை ரயில்கள் 8 மில்லியன் ரூபாயிலிருந்து 218 மில்லியன் ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு அறிக்கை, குறிப்பிடுகிறது.