விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்பிற்கு நாளாந்தம் பணம் அனுப்பும் இலங்கையர்கள்: கெமுனு விஜேரத்ன

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் சர்வதேச அமைப்பு மற்றும் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகள் ஆகியன தற்போது அதிக நிதியுதவி பெறும் அமைப்புகளாக இருப்பதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் சர்வதேச அமைப்பின் உறுப்பினர்களுக்கு இலங்கையிலுள்ள 50 வீதமானோர் தற்போதும் நிதி ஆதரவுகளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய உத்தியோகப்பூர்வ செவ்வியில் அவர் இதனை தெரவித்துள்ளார்.

தாம் தனிப்பட்ட ரீதியில் மேற்கொண்ட ஆய்வுக்கமைய, இலங்கையர்கள் நாளாந்தம் குறைந்தது ஒரு ரூபாவை தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் சர்வதேச அமைப்புக்கு பங்களிப்பாக கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பெரும்பாலான நிதி நிறுவனங்கள் விடுதலைப் புலிகளின் நிதியினால் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர்ந்தவர்களால் சேகரிக்கப்படும் பணம் இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்படுவதாகவும் அவர்கள் குறித்த நிதி ஆதரவுகளை சார்ந்து செயற்பாடுகளை முன்னெடுப்பது தற்போது நாட்டுக்கு பாரிய பிரச்சனையாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க காவல்துறையினர் மேற்கொள்ளும் முயற்சிகளை விடுதலை புலிகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆகிய அமைப்புகள் தோல்வியடைய செய்வதாக கெமுனு விஜேரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில், சிறிலங்கா அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் உத்தேச சட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்களை கொல்வதன் மூலம் எந்த போரையும் தோற்கடிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமது தனிப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட தகவல்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டால் அவற்றை அச்சமின்றி வெளியிடுவதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.