தாமரை கோபுரத்தை பார்வையிட்ட இலட்சக்கணக்கானோர்

கொழும்பில் அமைந்துள்ள தாமரை கோபுரம் திறந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த வருடத்தில் 1,172,936 உள்ளூர் மக்களும், 28,568 வெளிநாட்டவர்களும் கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாக கோபுர முகாமைத்துவ தலைவர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் கோபுரத்தை பார்வையிட்டவர்கள் மூலம் கிடைத்த வருமானம் ரூ. 550 மில்லியன் எனவும் தாமரை கோபுர நிர்வாகத்தால் பெறப்பட்ட கடனுக்கான ஆரம்ப குத்தகைக் கொடுப்பனவுக்காக 100 மில்லியன் செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

"சிறுவர்களுக்கான பகுதிகள், திறந்தவெளி திரையரங்குகள் மற்றும் புதுமையான மையங்கள் போன்ற பெரும்பாலான பகுதிகளை நாங்கள் உருவாக்கி, அதிக வருவாய் ஈட்டவும், மக்களுக்கு பல்வேறு அனுபவங்களை வழங்கவும் முயற்சி செய்து வருகிறோம்.

சிறுவர்களுக்கான விளையாட்டுப் பகுதிகளுக்கு தனித்துவமான உபகரணங்களை விண்ணப்பம் செய்துள்ளோம்.  நாங்கள் விண்ணப்பம் செய்த டிஜிட்டல் கலை அருங்காட்சியகம் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படும்.சுழலும் உணவகம் நவம்பரில் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும்," என்றார்.

அனைத்து ஏற்பாடுகளுடன் தாமரை கோபுர நிர்வாகத்திற்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் ரூ. 1,000 மில்லியன் வருவாய் கிடைக்கும்.

“செலவுகளைக் கருத்தில் கொள்ளும்போது, தற்போது பராமரிப்பு மற்றும் நிர்வாகத்திற்காக சுமார் 1 மில்லியன் ரூபாயைச் செலவிடுகிறோம். அடுத்த ஆண்டு, செலவைக் குறைத்துக்கொண்டு சூரிய சக்தி அமைப்புக்கு நாங்கள் செல்லவுள்ளோம்.

உள்ளூரில் பெரியவர்களுக்கு ரூ.500, சிறுவர்களுக்கு ரூ.200, வெளிநாட்டவர்களுக்கு ரூ.20, அவர்களின் சிறுவர்களுக்கு 10 அமெரிக்க டொலர் என டிக்கெட் கட்டணம் அறவிடப்பட்டு வருகிறது.

இந்த கட்டணத்தை உயர்த்துவது குறித்து தற்போது தாமரை கோபுர நிர்வாகம் எந்த முடிவும் எடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.