88-89 காலகட்டத்தைப் போன்றே ஜே.வி.பி. இன்னும் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது – நாமல்


மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட 88-89 காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி எவ்வாறு நடந்துகொண்டதோ அதேபோன்றுதான் தற்போதும் நடந்துகொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜே.வி.பி தமது தடிகள், வாள்கள், கத்திகள் மற்றும் தீப்பந்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக தொழிலாளர்களுடன் இணைந்து கொண்டதாக தாம் நினைத்ததாக தெரிவித்துள்ளார்.

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் ஜே.வி.பி.யும் இணைந்துகொள்வதற்கான கொள்கைத் தீர்மானத்திற்கு வரும் என்று தாங்கள் நினைத்ததாகவும் ஆனால் அது அப்படித் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏனெனில், மே 9ஆம் திகதி அவர்கள் நடந்துகொண்ட விதம் 88 மற்றும் 89 காலகட்டங்களின் நடத்தையை காட்டுகிறது என்றும் நாமல் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தற்போதைய அரசாங்கம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நாமல், “நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக தற்போதைய ஜனாதிபதி குறிப்பிட்ட நடைமுறையை நடைமுறைப்படுத்தி வருகிறார். எனவே நாங்கள் அவருக்கு சிறந்த ஆதரவை வழங்குவோம்.

நாங்கள் இருவரும் தனித்தனி அரசியல் கட்சிகள், அரசியல் கொள்கைகளை கருத்திற்கொள்ளும்போது நாங்கள் தனித்தனியாக நிற்கிறோம்.

ஆனால் நாட்டில் உள்ள மக்களின் தேவைகளுக்காக ஜனாதிபதியும் நாமும் ஒரு நடுத்தர புள்ளிக்கு கொள்கைகளை கொண்டுவர முயற்சிக்கிறோம்.

எந்த ஒரு கொள்கை முடிவும் எடுக்க முடியாவிட்டால், அவருடன் பேசி அதை சரிசெய்வோம்” என்றும் அவர்மேலும் தெரிவித்துள்ளார்.