இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) உறுப்பினர்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு பொய்யான அறிக்கைகளை வழங்கியதற்காக விரிவுரையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) விரிவுரையாளரே இவ்வாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) நேற்று (28) கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.
கைது குறித்து மேலும் தெரிய வருகையில், அண்மையில் இந்தியாவின் (India) அகமதாபாத்தில் (Ahmedabad) கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் சந்தேகநபர்கள் 2019 ஆம் ஆண்டு முதல் புனர்வாழ்வு பட்டியலில் இருப்பதாக நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, கைது செய்யப்பட்ட விரிவுரையாளர் உரிய விபரங்களை அறியவில்லை என ஒப்புக்கொண்டதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இவர் இன்று (29) பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.