கோலாகலமாக தொடங்கியது லங்கா பிரிமியர் லீக் தொடர் - முதல் போட்டியில் கண்டிக்கு வெற்றி


5ஆவது முறையாக நடைபெறும் லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நேற்று மாலை பல்லேகெல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கியது.

இந்த ஆண்டு LPL தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் முன்னணி டி 20 வீரர்கள் பலர் இந்த தொடரில் விளையாட உள்ளனர்.

LPL தொடரின் தூதுவரான அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மைக்கல் கிளார்க் இந்த ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றதோடு, இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அதபத்து LPL தொடரை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிலையில் தொடரின் முதலாவது போட்டியில் கண்டி பெல்கன்ஸ் 6 விக்கெட்டுக்களால் அணி வெற்றிப் பெற்றுள்ளது.

தொடரின் முதல் போட்டியில்  தம்புள்ளை சிக்சர்ஸ் மற்றும் கண்டி பெல்கன்ஸ் அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற கண்டி அணி முதலில் துடுப்பெடுத்தாட தம்புள்ளை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் சமிந்து விக்கிரமசிங்க 62 ஓட்டங்களையும் மற்றும் மார்க் செப்மேன் 91 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் தசுன் சானக்க 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய, 180 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 17.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் தினேஷ் சந்திமால் அதிகபட்சமாக 65 ஓட்டங்களைப் பெற்றுக்  கொண்டார்.

ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 37 ஓட்டங்களையும் மற்றும் தசுன் சானக்க 46 ஓட்டங்களையும் பெற்று அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றமை குறிப்பிடத்தக்கது.