குருந்தூர் மலை விகாரை நிர்மாணத்தை கைவிடப்போவதில்லை - சரத் வீரசேகர சூளுரை

தொல்பொருள் திணைக்களத்தால் குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் எந்தவொரு காரணத்திற்காகவும் நிறுத்தப்பட மாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் நாட்டில் இனவாதத்தை தூண்டுவதாகவும் சிங்கள - தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் நட்புறவை சிதைக்கும் வகையில் அவர்கள் செயல்பட கூடாதெனவும் சரத் வீரசேகர நாடாளுமன்றில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தொல்பொருள் திணைக்களத்தால் குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் எந்தவொரு காரணத்திற்காகவும் நிறுத்தப்பட மாட்டாது.

குருந்தூர் மலையிலுள்ள 2000 வருட பழமையான தூபியை புனரமைப்பு செய்வதற்கு சென்ற தொல்லியல் ஆராய்ச்சியாளர்களை விரட்டியதோடு அங்கு வழிபாடுகளில் ஈடுபடச் சென்ற பிக்குகளையும் தமிழர்கள் விரட்டியுள்ளமை மதக்கலவரத்தை தூண்டும் செயல் ஆகும்.

பண்டைய மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்க்க கூடிய இவ்வாறான இடங்களில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க, அரசாங்கம் முன்வைக்கும் திட்டங்களும் அவற்றை குறித்து நாம் முன்வைக்கும் கருத்துக்களும் இனவாதத்தை தூண்டாது.

திருக்கோணேஸ்வரம் ஆலயத்துக்கு செல்லும் பாதை ஆலயத்துக்கு சொந்தமில்லை என்பதால் அந்த வழியில் உள்ள சுமார் 60 கடைகள் அபிவிருத்தி செய்யப்படும்

இந்தக் கடைகளை சிங்களவர்கள் வைத்திருப்பதால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதற்கு எதிராக இனவாதமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் தொன்மை பாதுகாக்கப்பட வேண்டும். அதனை நாம் பாதுகாப்போம். அதேபோல் குருந்தூர் மலையை தமிழர்கள் பாதுகாக்க வேண்டும்” என்றார்.