PUBG விளையாட்டு தொடர்பான கிராஃப்டன் நிறுவனத்தின் முடிவு

பிரபல பப்ஜி பேட்டில் கிரவுண்ட் விளையாட்டில் போலியாக நுழைந்து ஏமாற்றுபவர்களை கண்டறிந்து தடை செய்ய கிராஃப்டன் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

பப்ஜி மொபைல் விளையாட்டு தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதனை நிர்வகிக்கும் கொரிய நாட்டின் கிராஃப்டன் நிறுவனம், இந்தியாவுக்கென பிரத்யேக பேட்டில் கிரவுண்ட் மொபைல் விளையாட்டை அறிமுகம் செய்தது. பப்ஜி விளையாட்டு ரசிகர்களின் தாகத்தை இது தணித்தது என்றே சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த விளையாட்டிற்கு அடிமையாகி கிடக்கின்றனர்.

எந்தளவுக்கு பேட்டில் கிரவுண்ட் விளையாட்டு பிரபலம் அடைந்ததோ, அதே அளவிற்கு ஏமாற்று வித்தகர்கள் அதில் உள் நுழைவதும் அதிகரித்தது. இது நிறுவனத்திற்கு பெரும் தலைவலியாக மாறியது. காரணம், மூன்றாம் தர செயலிகளை துணையாக வைத்துக் கொண்டு பேட்டில் கிரவுண்ட் விளையாடும் இவர்கள், அனைத்து நிலைகளிலும் எளிதாக முன்னேறி செல்ல முடியும்.

அப்போது நேர்மையாக விளையாடும் பயனர்கள் தோல்வியை தழுவுவார்கள். இணையவழி தொடர்புடைய விளையாட்டு இது என்பதால், இவ்வாறு நடைபெறும் தவறுகளை நிறுவனம் உடனடியாக களைய வேண்டும். இல்லையென்றால், பயனர்களை நிறுவனம் இழக்க நேரிடும்.

இதனை புரிந்துகொண்ட கிராஃப்டன், அதிரடியாக சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது ஏமாற்றுக்காரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. நிறுவனத்தின் அறிவிப்பில், “டிசம்பர் 24ஆம் தேதி முதல், போலியான கணக்கு, போலியான செயலிகள் கொண்டு பேட்டில் கிரவுண்ட் விளையாடும் நபர்களின் தகவல் சாதனங்கள் தடைசெய்யப்படும்” என்று குறிப்பிட்டிருந்தது.

பொதுவாக, தவறுகள் நடக்கும்பட்சத்தில், போலியாக செயல்படும் கணக்குகளை தடை செய்வதே இதுபோன்ற நிறுவனங்களின் நடவடிக்கையாக இருந்தது. ஆனால், தற்போது கிராஃப்டன் நிறுவனம் எடுத்திருக்கும் முடிவு துணிகரமானது. அதாவது, போலியாக செயல்படும் நபர்களின் தகவல் சாதனங்கள் (கேட்ஜெட்டுகள்) தடைசெய்யப்பட்டால், பின்னாட்களில் அவர்களால் கிராஃப்டன் நிறுவனம் வெளியிடும், எந்தவொரு விளையாட்டையும் அணுக முடியாத சூழல் ஏற்படும்.

பயனர்களை இழந்தாலும், சேவையை நேர்மையாக அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிராஃப்டன் வெளியிட்ட அறிவிப்புக்கு கேமர்கள் பலரும் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர். முன்னதாக, பல தரப்பிலிருந்தும் இது போன்ற புகார்கள் வந்ததை தொடர்ந்தே, இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது.