கிருலப்பனையில் பதற்றம் - ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம்

 

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் (IUSF) கிருலப்பனையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் முயற்சியில் காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (10) நடத்தவிருந்த எதிர்ப்பு ஊர்வலம் பல வீதிகளுக்குள் செல்வதைத் தடுக்கும் வகையில் நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அமைப்பாளர் விதாரண மதுஷான் இந்திரஜித், பிக்குகள் பேரவையின் அமைப்பாளர் கல்வெவ சிறிதர்ம உள்ளிட்ட 10 பேருக்கு எதிராகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆரம்பமாகி மருதானை மருதானை சந்தி, டீன்ஸ் பார்க், ஒரபிபாஷா மாவத்தை ஆகிய இடங்களிலிருந்து டெக்னிக்கல் சந்தி, ஒல்கெட் மாவத்தை வழியாக அதிபர் செயலகத்தை நோக்கி பேரணி செல்லவுள்ளதாக மருதானை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளதாக, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வீதிகள் மற்றும் நடைபாதைகளை பயன்படுத்தும் பயணிகள் மற்றும் சாரதிகள் பயன்படுத்த முடியாத வகையில் எதிர்ப்பு பேரணிகளை நடத்துவதற்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவவல்துறை தலைமையகம் தெரிவித்த நிலையில், அதனை மீறி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றபோது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.