கண்டி, கெலிஓயா அம்பரப்பொல பகுதியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி, அம்பாறை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 10 மணி அளவில் குறித்த மாணவி மீட்கப்பட்டுள்ளார்.
அம்பாறை பிரதான பஸ் நிலையத்தில் வைத்து மாணவி உட்பட அவரை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டு அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதேநேரம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கறுப்பு வேன் பொலன்னறுவை நகரில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, வேனின் சாரதியையும் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கடத்தலின் முக்கிய சந்தேகநபர், மாணவியின் தந்தையின் சகோதரிகளில் ஒருவரின் மகன் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மாணவிக்கும் சந்தேகநபருக்கும் இடையில் திருமணம் செய்ய இரு தரப்பினரும் ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்ததாகவும், ஆனால் பின்னர் மாணவியின் தந்தை தனது மறுப்பை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட பிரச்சினைக்குரிய சூழ்நிலை காரணமாக சந்தேகநபர் மாணவியை கடத்திச் சென்றுள்ளமை பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் தெரியவந்துள்ளது.