கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக முதலமைச்சரின் கருத்து சாத்தியமற்றது; அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு


கச்சத்தீவை விடுவிப்பது தொடர்பான தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்து சாத்தியமற்றது என, இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சென்னையில் மே 26 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இந்திய பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கச்சத்தீவை மீட்பதற்குரிய பொருத்தமான நேரம் இதுவென கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்தை நான் மறுக்கா விட்டாலும், அவரின் கருத்து சாத்தியமற்றது. தமிழ்நாடு மக்கள் முதலமைச்சருக்கு அழுத்தத்தை கொடுத்திருக்கலாம். அதற்காக முதலமைச்சர் இவ்வாறான கருத்தை தெரிவித்திருக்கலாம். அவரின் கருத்து உண்மையாக இருக்குமாக இருந்தால் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதனை கூறியிருப்பார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இந்த விடயம் தொடர்பில் ஒரு இணக்கப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கச்சத்தீவால் யாருக்கு அதிக லாபம் கிடைக்கிறது என்று சட்டப்பூர்வமாக கடிதமொன்றை அனுப்ப உள்ளேன்” எனவும் அமைச்சர் தெரிவித்தார்.