பொலிஸ் மா அதிபரின் சிக்கல் நிலைக்கு ரணிலே காரணம்: அனுர தரப்பு குற்றச்சாட்டு

பொலிஸ் மா அதிபரின் சிக்கல் நிலைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே (Ranil wickremesinghe) பிரதான பங்காளியாவார் என  தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இன்று (27.07.2024) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடா்பாக கருத்துத் தொிவித்த சட்டத்தரணி சுனில் வட்டகல, "பொலிஸ் மா அதிபரின் பதவியை தற்காலிகமாக தடைசெய்து உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவினை பிறப்பித்தது.

அத்தோடு, பொருத்தமான ஒருவரை பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்குமாறும் ஜனாதிபதிக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அளித்த சட்டவிரோதமான வாக்களிப்பு காரணமாகவே இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil wickremesinghe) இந்த சிக்கலின் பிரதானமான பங்காளியாவார். தேசபந்துவின் நியமனம் இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தரப்பிலிருந்து பதில் பொலிஸ் மா அதிபரொருவர் தொடர்பாக எந்தவோர் அணுகலையும் காணக்கூடியதாக இல்லை.

இதன் காரணமாக, நாட்டு மக்களிடையே பாரதூரமான ஐயப்பாடு தோன்றியுள்ளது. ஜே. ஆர். ஜயவர்தனவின் காலத்தில் உயர்நீதிமன்றம் மீது கல்லெறிந்த வரலாறு இருக்கின்றது.

மசிந்த ராஜபக்சவின் காலத்தில் தமக்குச் சார்பற்ற தீர்ப்பினை வழங்கியமைக்காக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை குற்றப் பிரேரணையொன்று மூலமாக அவர்கள் விரட்டியடித்தார்கள்.

அரசாங்கத்தின் தேவை உயர்நீதிமன்றத்தினால் ஈடேறாத சந்தர்ப்பங்களில் நிறைவேற்றுத்துறை இடையீடு செய்து வேறொரு முரண்பாட்டினை உருவாக்குகிறது.

இந்தத் தீர்ப்பினால் அரசாங்கம் நீதிமன்றத்துடன் முரண்பாட்டு நிலையொன்றுக்கு செல்ல முயற்சிப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. அந்தவகையில், நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமைச்சரவையின் முன்னிலையில் ஆய்வுக்குட்படுத்துவதாக நேற்று கூறப்பட்டிருந்தது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமைச்சரவையில் ஆய்வுக்குட்படுத்துவது அர்த்தமற்ற செயலாகும். அத்தோடு, உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எவ்விதத்திலும் தேர்தலை பிற்போட காரணமாக அமையாது என்பதை நாம் மக்களுக்கு எடுத்துரைக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.