சஜித்துடன் இணைவது உறுதி முடிவல்ல..! திடீரென பல்டி அடிக்கும் டலஸ் அணி

எதிர்க்கட்சி கூட்டணியில் இணைவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினரான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அண்மையில் சிறிலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இருந்து பிரிந்த பாராளுமன்ற  உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒன்று கூடி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை கருத்திற்கொண்டு மாபெரும் அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான நடவடிக்கையை அறிவித்தனர்.

இதன்போது, எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக் கூட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பை எம்.பி.க்கள் மூவரும் உறுதிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளோம் எனவும் ஆனால் எமது கட்சியின் தலைவர் டலஸ் அழகப்பெரும எவ்வாறு செயற்படுவார் என்று எமக்கு தெரியாது எனவும் ஜீ.எல். பீரிஸ் நேற்று தெரிவித்தார்.

இதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஒன்றிணைந்த எதிரணி கூட்டணியை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம் எனவும் கூட்டணியின் பொதுவேட்பாளராக சஜித் பிரேமதாஸவை களமிறக்குவோம் எனவும் சஜித்- டலஸ் அணிக்குள் முரண்பாடில்லை எனவும் சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.

இந்நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அதேவேளை, நாங்கள் உத்தியோகபூர்வமாக கட்சியில் இணையவில்லை என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.