மகாநாயக்க தேரர்களிடம் மன்னிப்பு கோரிய - ஜெரோம் பெர்ணாண்டோவின் பெற்றோர்கள்

இலங்கையில் பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்ணாண்டோவின் பெற்றோர் இன்று மகாநாயக்க தேரர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளனர்.

இதனடிப்படையில், தமது தவறை ஏற்றுக் கொண்ட காரணத்தால் போதகர் ஜெரோம் பெர்ணாண்டோவை மன்னிக்க மகாநாயக்க தேரர்கள் தயாராக இருப்பதாக ராமஞ்ஞ பீடத்தின் பிரதம சங்கநாயக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கடந்த மே மாதம் போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

இதன் மூலம் பௌத்த மதம் சமூகத்தில் தவறான முறையில் வெளிக்காட்டப்பட்டது, இது பௌத்தர்களை பெருமளவில் மனரீதியாக பாதித்திருந்தது.

இதனை எதிர்த்து பௌத்தர்கள் கடும் எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர், இந்த நிலையில்,போதகர் ஜெரோம் பெர்ணாண்டோவின் பெற்றோர் இன்று (19) மகாநாயக்க தேரர்களை சந்தித்தனர்.

இதன் போது, தமது மகன் தவறான கருத்தை வெளியிட்டார் என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டு சுமூகமான முறையில் பேச்சுவார்த்தையை நிகழ்த்தினார்கள்.

மதங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்த்து, ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் அபிவிருத்தியடைந்து வரும் சமூகத்தில் ஏற்படும் முரண்பாடுகளுக்கு மதம் ஒரு காரணியாக இருக்க கூடாது என்றும், அமைதியான பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வுகள் காணப்பட வேண்டும் என்றும் இதன் போது பேசப்பட்டது.