யாழ். மருத்துவபீட மாணவர்கள் இருவர் ஹெரோயினுக்கு அடிமை!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் இருவர் ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நீதி அமைச்சர் விஜயதாச தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலையே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் 9 ஆயிரத்து 900 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உலகின் மிக மிக ஆபத்தான உயிர்கொல்லி கொக்கெய்ன் போதைப்பொருள் பாவனையாளராக ஒருவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களை இலக்கு வைத்தே போதைப்பொருள் வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள கலட்டி சந்திக்கு அண்மையாக அமைத்துள்ள மாணவர் விடுதி ஒன்றில் யாழ்.பல்கலைக்கழக கல்லூரி மாணவர் , கொழும்பு பல்கலைக்கழக மாணவர் உள்ளிட்ட மூவர் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களுக்கு போதைப்பொருளை விநியோகித்த ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.