விடுதலைப் புலிகளின் தலைவர் வந்தால் நன்றாக இருக்கும்: தமிழர் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர்


தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வந்தால் நன்றாக இருக்கும் ஆனால் இலங்கையிலே விடுதலைப் புலிகளின் தலைவர் இல்லை என உறுதிப்படுத்திய பின்பு தான் இலங்கையின் பாதுகாப்பு தளர்த்தப்பட்டுள்ளது, எனவே இந்திய தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் அமைப்பை வைத்தே இன்று அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர் என மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார்.

நேற்று (15.02.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், பழ நெடுமாறன் கூறியது போல இந்தியாவில் பல அரசியல் தலைவர்கள் இலங்கையில் உள்ள மக்களை உசுப்பேத்துவதையும், மக்களை குழப்பமடைய வைப்பதையும் ஒரு வழக்கமான கொண்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்திருந்தால் அதிஉச்ச பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும். அவர் இல்லை என்ற முடிவுக்கு வரும் அதேநேரத்தில் எதுவும் எப்போதும் நடக்கலாம் அது ஆச்சரியப்பட வேண்டிய விடையமல்ல.

விடுதலைப் புலிகளின் தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற விடயத்தை தலைவர் ஒருவரே அறிவார்.

இதேவேளை பௌத்த பிக்குகளின் போராட்டம் காலம் காலமாக நடந்துகொள்ளும் விடயம். இதனை அரசாங்கம் கண்டு கொள்ளாது இருப்பதும் புதிய விடயமல்ல.

இது ஆச்சரியப்படும் விடயமில்லை இந்த 13 திருத்தச்சட்டம் நாட்கள் செல்லச் செல்ல அதன் நிகழ்வு நடைபெறும் போது இதைவிட இன்னும் மோசமான போராட்டங்களை பௌத்த பிக்குகள் முன்னெடுப்பார்கள்.

கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற இரண்டு இராஜாங்க அமைச்சர்களான பிள்ளையானாக இருக்கட்டும், அல்லது வியாழேந்திரனாக இருக்கட்டும் இவர்கள் செய்த அபிவிருத்தி வேலைகளை பார்த்தால் அவர்களுடைய வருமானம் சார்ந்த அபிவிருத்தி நடக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சார்ந்த அபிவிருத்தி கிடையாது இந்த வீதி செய்தால் எவ்வளவு தரகுபணம் கிடைக்கும் அதை செய்யால் எவ்வளவு தரகு பணம் கிடைக்கும் என்ற அவதானத்தில் இருந்தனரே தவிர பொதுமக்கள் நலன் சார்ந்து எந்த அபிவிருத்தியையும் செய்யவில்லை.

அவர்களுக்கு எந்த எந்த திட்டத்தில் அதிக தரகு பணம் கிமைக்கின்றதே அதைத்தான் கையில் எடுத்து செய்து கொண்டிருக்கின்றனரே தவிர குறிப்பிடப்படும் அபிவிருத்தி நடைபெறவில்லை பிள்ளையான் என்கின்ற அடையாளம் மொட்டினுடைய அடையாளம் அதாவது ராஜபக்ஷ குடும்பத்தின் அடையாளமே பிள்ளையானின் அடையாளம் இது சிறு குழந்தைக்கும் தெரியும்.

ஆனால் அவர் கடந்த காலத்தில் சிறையில் இருக்கும் போது அவர் வெளியில் வந்தால் ஏதோ தங்க மழை பெய்யும் வயலில் விளைகின்ற நெற்கதிர்கள் எல்லாம் தங்கம் தங்கமாக கதிர் விடும் என்ற கதை யெல்லாம் விட்டுவந்தனர்.

கடந்த முறை தேர்தலிலே நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள் அல்லது தமிழ் மக்கள் புலிகளுக்கு வாக்களியுங்கள் என நாங்கள் பிரச்சாரம் செய்தோம் என்ன காரணம் என்றால் அன்றைய சூழலில் நான்கு தமிழ் பிரதிநிதிகளை பெறவேண்டும் என்றதால் பிரச்சாரத்தை செய்தோம் ஆனால் அப்படி ஒரு பிழையை நாங்கள் செய்துள்ளோம் என காலப் போக்கில் அறிந்து கொண்டோம் என தெரிவித்துள்ளார்.