அரபு நாடாக இருந்திருந்தால் மைத்ரி கல்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பார் என தகவல்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து மைத்திரிபால சிறிசேனவை விரட்டுங்கள் என அக்கட்சி உறுப்பினர்களிடம் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது இந்நாட்டில் புரட்சிகரமான அரசியலை முன்னெடுத்த கட்சியாகும்.

கிராமத்தில் பிறந்தவர்களுக்குக்கூட வாய்ப்பளித்த கட்சி. இப்படிப்பட்ட கட்சியானது மைத்திரியின் தலைமைத்துவத்தின் கீழ் சீரழிந்துள்ளது.

எனவே, மைத்திரிபால சிறிசேனவை விரட்டுமாறு கட்சி ஆதரவாளர்களிடம், உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

இதுவரை அவர் இழைத்துள்ள தவறுகளே போதுமானவை. அவருக்கு மூளையில் பிரச்சினை இருப்பதையே அவரின் அறிவிப்புகள் வெளிப்படுத்துகின்றன.

அரபு நாடாக இருந்திருந்தால் அவர் கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பார் என கூறியுள்ளார்.

இதேநேரம் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்து அரசியல் மயமாக்கப்பட்டு வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் வலியை அரசியலாக்குவது போல் இருப்பதாகவும் பாராமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன  தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் உயிர்த்த ஞாயிறு அன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அப்போது, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், தாக்குதல் குறித்து தனக்குத் தெரியும் என்றும், தாக்குதல் இவ்வளவு கடுமையாக இருக்கும் என்று நினைக்கவில்லை என்றும் கூறினார்.

மேலும் உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் பற்றிய உளவுத்துறை தகவல் கூட தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தாக்குதலை மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்தாரா என நிலாந்த ஜயவர்தன ஜனாதிபதி ஆணைக்குழுவில் வினவிய போது.அவர் அமைதியாக இருந்தது தெரியவந்துள்ளது.

இந்தத் தகவல்களைப் பார்க்கும்போது, இந்தத் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஓரளவு அறிவு இருந்திருக்க வேண்டும் என்று யூகிக்க முடிகிறது.

மேலும் இதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை நடத்திய குழு தொடர்பில் மூன்றாம் தரப்பினரிடம் இருந்து தனக்கு தகவல் கிடைத்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்த தகவல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியப்படுத்தப்பட்டதாக அவர் கூறுகிறார். அப்படியிருக்க மைத்திரிபால சிறிசேன ஏன் இதுபற்றி வெளிப்படுத்தவில்லை.

வெளிப்படுத்தத் தவறுவது கிரிமினல் குற்றமாகும். மூன்று வாரங்களுக்குள் தகவல்களை மறைக்க முடியும். ஆதாரங்களை மறைக்கலாம், குற்றவாளிகள் தப்பிக்கலாம், இப்படி ஒரு நிலை ஏற்படுமா என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது.

இந்த தகவலை நீதிமன்றம் உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இறந்த கத்தோலிக்க மக்களுக்கு நீதி வழங்குவதில் தாமதிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.