சாதாரண தர பரீட்சையின் விஞ்ஞான பாட வினாத்தாள் குறித்து குற்றச்சாட்டு

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு (GCE OL exam) அமைவாக அண்மையில் நடைபெற்ற விஞ்ஞான (Science) பாடத்திற்குரிய வினாத்தாள், ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே (Madhura Withanage) தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

விஞ்ஞான பாடம் தொடர்பான வினாத்தாளில் மூன்று பல்தேர்வு வினாக்கள் மற்றும் மூன்று கட்டுரை வினாக்கள் தொடர்பாக ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும் இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடமும் (The Commissioner of Examinations) மதுர விதானகே வினவியதாக தெரிவித்தார்.

எனவே பரீட்சை முடிந்து ஒரு மாதத்திற்குப் பின்னர் நடத்தப்படும் புள்ளிகள் வழங்கல் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வின் போது, ​​இது தொடர்பில் கலந்துரையாடி, மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் புள்ளிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதன்போது கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.