உயர்தர பரீட்சை வினாத்தாள் வெளியான விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை வினாத்தாளை வெளியிட்ட நபர்களிடமிருந்து மீள் பரீட்சைக்கான செலவு தொகையை அறவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சைக்கான விவசாய விஞ்ஞான வினாத்தாள் பரீட்சைக்கு முன்கூட்டியே வெளியிடப்பட்டிருந்தது.

இந்த பரீட்சையை நடாத்துவதற்காக அரசாங்கத்திற்கு ஏற்படக்கூடிய செலவுகள், வினாத்தாளை வெளியிட்டவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விவசாய விஞ்ஞானம் பாகம் 1 மற்றும் பாகம் 2 ஆகிய இரண்டு வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியான நிலையில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் இந்த பரீட்சைகள் மீள நடத்தப்பட உள்ளன.

இந்த வினாத்தாளை வெளியிட்ட குற்றச்சாட்டில் அம்பாறை பிரதேச ஆசிரியர் ஒருவரும், மொரட்டுவ பிரதேச அலுவலகப் உதவிப் பணியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.