இலங்கையில்(sri lanka) அறுகம் குடாவில் இஸ்ரேலியர்களை(israel) இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பெருமளவான இஸ்ரேலியர்கள் நாடு திரும்பிய நிலையில் இன்று (05) மீண்டும் இஸ்ரேலிய பிரஜைகள் சுற்றுலாவை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இன்று காலை இலங்கைக்கு விஜயம் செய்த இஸ்ரேலிய பிரஜைகள் குழு கதிர்காமம் கிரிவெஹர மற்றும் கதிர்காமம் ஆலயத்தை பார்வையிட வருகை தந்தனர்.
அவர்களுக்கு விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், பாதுகாப்பு படையினரும் அரசாங்கமும் இணைந்து செயற்பட்டுள்ளனர்.
இலங்கையில் பெருமளவு இஸ்ரேலியர்கள் சுற்றுலாவிற்கு வருகை தந்த நிலையில் தாக்குதல் அச்சத்தை அடுத்து பெருமளவானவர்கள் நாட்டிற்கு திரும்பிய நிலையில் தற்போது 200 ற்கும் குறைவான இஸ்ரேலிய சுற்றுலாதாரிகளே இலங்கையில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கடந்த ஒக்டோபர் மாதம் 135,907 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்திருந்தனர். அதேநேரம் இவ்வருடம் (2024) தொடக்கம் ஒக்டோபர் மாத இறுதிவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பதினாறு இலட்சத்தைத் தாண்டி 1,620,715 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு (2023), நாட்டிற்கு வருகை தந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,487,303 ஆகும்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வந்த 109,199 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 24.95 வீதத்தால் 135,907 ஆக அதிகரித்துள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.