இலங்கையர்களின் பொறுப்பற்ற நடத்தை : இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்கு நெருக்கடி


இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்குச்  சென்றுள்ள சில தொழிலாளர்களின் பொறுப்பற்ற நடத்தை காரணமாக இஸ்ரேலிய வேலை வாய்ப்புக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கும் இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் நவோர் கிலோனுக்கும் இடையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேற்று (04) சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது இலங்கையர்களுக்கான இஸ்ரேலின் வேலை வாய்ப்புகள் மற்றும் தற்போது இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.


இதுதொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“இரண்டு வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலில் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக இலங்கையிலிருந்து பயிற்சியற்ற தொழிலாளர்கள் கூட கோரப்பட்டனர்.

எனினும் இஸ்ரேலுக்குச் சென்ற சில இலங்கையர்களின் நடத்தை மற்றும் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக ஏற்பட்ட பிரச்சினைகளால் இஸ்ரேலில் உள்ள விவசாய தொழில் முயற்சியாளர்கள் தற்போது இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் தயக்கம் காட்டுகின்றனர்.

இஸ்ரேலில் உள்ள சில இலங்கைத் தொழிலாளர்கள் இலங்கையை போன்று போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயத் துறை அன்றி கட்டுமானம், தாதியர் பராமரிப்பாளர், ஹோட்டல் போன்றவற்றில் பல வேலை வாய்ப்புகள் உள்ளன.

இஸ்ரேலில் பாரிய அளவிலான கட்டுமானத் திட்டங்களுக்கு தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்.  தற்போது தெரிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு இத்திட்டங்களில் வாய்ப்பு வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, இஸ்ரேலில் நெடுஞ்சாலைகள் மற்றும் தொடருந்துப் பாதைகள் போன்ற பாரிய நிர்மாண துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு இலங்கையர்களுக்குக் கிடைக்கும்.

இதேநேரம் இஸ்ரேலில் பணிக்குச் சென்ற தொழிலாளர்களின் முறையற்ற நடத்தைக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், தேவைப்பட்டால் அந்த தொழிலாளர்களை மீண்டும் இலங்கைக்கு அழைக்கவும் தயங்கமாட்டேன்“ என தெரிவித்தார்.