நல்லூர் ஆலய வளாகத்தில் சில பக்தர்களின் பொறுப்பற்ற செயற்பாடு - அநாகரிக செயற்பாட்டை தவிர்க்க கோரிக்கை

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய சுற்று வீதியை அசுத்தப்படுத்தும் சிலருடைய பெறுப்பற்ற செயற்பாடுகள் தொடர்பில் அதிர்ப்த்தி வெளியிடப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெரும் திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. எதிர்வரும் தினங்களில் ஆலயத்தின் முக்கியத்துவம் வாய்ந்த சம்பரம், தேர், தீர்தோற்சவம் போன்ற திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் ஆலயத்திற்கு அதிகளவான பக்தர்கள் வருகைதர ஆரம்பித்துள்ளனர். மேலும் நேர்த்திக்கடன் செலுத்திக் கொள்வதற்காகவும் அதிகளவான பக்தர்கள் அதிகாலையில் ஆலயத்திற்கு வருகைதருகின்றனர்.

இந்நிலையில் மாலை நேர திருவிழாவிற்காக வரும் பெரும் தொகையான பக்தர்களில் சிலருடைய பொறுப்பற்ற செயற்பாடுகள், ஆலயத்தில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களை முகம் சுழிக்க வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மாலைவேளையில்,  திருவிழாவிற்குச் செல்லும் சிலர் நேர்திக்கடன் செலுத்தும் மணல் பகுதியான ஆயலத்தின் வெளிவீதியில் அமர்ந்திருந்து மணல்களை குவித்தும், கச்சான், காரம்சுண்டல், ஜஸ்கிறீம் போன்ற தின்பண்டங்களை உட்கொண்டுவிட்டு, அத் திண்பட்டங்களின் கழிவுகளை (கச்சான் கோது, காரம்சுண்டல் பை, ஜஸ்கிறீம் பை) மணல் பகுதியிலேயே விட்டுச் செல்கின்றனர்.

இது போன்ற பொறுப்பற்ற செயற்பாடுகள், ஆலயத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களை முகம் சுழிக்க வைப்பதாக அமைகின்றது. ஆலய நிர்வாகம் மற்றும் யாழ்.மாநகர சபையின் அறிவுறுத்தல்களையும் பொருட்படுத்திக் கொள்ளாமல், சிலருடைய இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அரங்கேற்றப்படுகின்றன.

எனவே ஆலயத்திற்கு வருகைதரும் அடியவர்கள் ஆலயத்தின் புனித பிரதேசங்களில் இவ்வாறான அநாகரிகமான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.