ஐபிஎல் சூதாட்டத்தில் சீரழிந்த குடும்பம்! குடும்ப பெண் எடுத்த விபரீத முடிவு

இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பமாகி களம் சூடு பிடித்துள்ள நிலையில், சூதாட்டத்தில் 1 கோடி ரூபாயை இழந்த நபரின் மனைவி கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பொறியியல் பட்டதாரியான தர்ஷன் பாபு என்பவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஆர்வகம் கொண்டவர். கடந்த 2021 ஆம் ஆண்டில் இருந்தே ஐ.பி.எல் போட்டிகள் தொடர்பில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சூதாட்டத்தில் தோல்வி காணும் போதெல்லாம் இவர் கடன் வாங்கத் தொடங்கியுள்ளார், கடன் தொகை அதிகமான நிலையில், கடன் அளித்தவர்கள் நெருக்கடி தரத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், 23 வயது நிறைந்த அவரது மனைவி ரஞ்சிதா கடன் தொல்லையினை தாங்க முடியாத காரணத்தினால் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் 18ம் திகதியன்று கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள வீட்டில் ரஞ்சிதா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தர்ஷன் சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் கடனாளியாக உள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

தர்ஷன் பொறியியளாலராக பணியாற்றி வரும் நிலையில், 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆண்டு வரை ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார், மேலும் சூதாடுவதற்காக சுமார் 1.5 கோடி ரூபாய் வரையில் அவர் கடன் வாங்கியுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தர்ஷன் சுமார் 84 லட்சம் வரையில் தற்போதும் கடனாளியாக உள்ளார், தர்ஷன் மற்றும் ரஞ்சிதா திருமணம் 2020 ஆம் ஆண்டில் இடம்பெற்றுள்ளது, ஆனால் 2021 ஆம் ஆண்டில் தான் தர்ஷனின் சூதாட்டம் குறித்து அவர் அறிந்துகொண்டுள்ளார்.

தற்போது ரஞ்சிதாவின் தந்தை தமது மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் என 13 பேர்களின் பெயர்களை பட்டியலிட்டு புகார் அளித்துள்ளார், இவர்கள் தர்ஷனுக்கு கடன் கொடுத்தவர்கள் என்றே கூறப்படுகிறது.

மேலும், தமது மருமகனை ஏமாற்றியே சூதாட்டத்தில் ஈடுபட வைத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மிக விரைவில் பல கோடிகளை சம்பாதிக்கலாம் என கூறிய ஆசை வார்த்தையை நம்பியே தர்ஷன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ரஞ்சிதாவின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.