அம்மனுக்கு விசாரணை - புத்தருக்கு ஆராதனையா..!

தீவகத்துக்கான நுழைவாயிலாக விளங்கும் பண்ணை சுற்றுவட்டத்திற்கு அண்மையில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுவதற்கு காவல்துறையினர் நீதிமன்றத்தின் ஊடாக எடுத்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் செயற்பாட்டை பக்க சார்பானது என்று கடுமையாகச் சாடி இளையோர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த சித்திரைப் புத்தாண்டு அன்று பண்ணை சுற்றுவட்டத்திற்கு அண்மையில் நாகபூசணி அம்மன் சிலை வைக்கப்பட்டது. இந்தச் சிலையை நேற்று முன்தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக அன்றைய தினம் யாழ்ப்பாணம் காவல் நிலைய பொறுப்பதிகாரியால் நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான நீதிமன்ற கட்டளை சிலைக்கு அருகில் ஒட்டப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் இன, மத, சமூக செயற்பாடுகளுக்கு விளைவுகள் ஏற்படும் நிலை உருவாகி சமாதான சீர்குலைவு ஏற்பட வாய்ப்புள்ளது என அறிக்கை செய்து அந்த சிலையை அகற்றுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிக்கு கட்டளை ஒன்றை பிறப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது” என்று காவல்துறையினரால் ஒட்டப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாசகத்தை சுட்டிக்காட்டி காவல்துறையினரின் பக்க சார்பான நடவடிக்கையை இளையோர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டித்து வருகின்றனர்.

குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி விகாரை அமைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், குருந்தூர் மலையில் உடைக்கப்பட்ட இந்து ஆலய விக்கிரகங்களை கண்டுபிடிக்காத காவல்துறையினர் இங்கு மாத்திரம் இவ்வளவு ஆர்வம் காண்பிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் குறிகாட்டுவான் இறங்குதுறையில் கடற்படையினரால் வைக்கப்பட்டுள்ள அரச மரத்தைக் கூட அகற்ற ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்விகளை தொடுத்துள்ளனர்.

இந்தச் சிலை வைக்கப்பட்டமையால் இன, மத முரண்பாடு ஏற்பட்டு சமாதானம் சீர்குலையும் என்று எப்படி காவல்துறையினர் குறிப்பிட முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் தமிழர்கள் வாழும் பகுதிகளில் புத்தர் சிலைகளை வைப்பதாலேயே அவ்வாறான சூழல் ஏற்படலாம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளதுடன் அது தொடர்பில் வாயை திறக்காத காவல்துறை திணைக்களம் இத்தகைய நடவடிக்கையை எடுப்பது பக்க சார்பானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, நயினாதீவில் உள்ள விகாராதிபதியின் தூண்டுதலாலேயே இவ்வாறான ஒரு நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.