புலம்பெயர் தொழிலாளர்களுக்காக விசேட திட்டம் அறிமுகம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான விசேட ஓய்வூதியத் திட்டம் எதிர்வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஆதரவுடன் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் விசேட ஓய்வூதியத் திட்டத்திற்கு தகுதிபெறுவார்கள்.

இந்தத் திட்டத்திற்கான ஆரம்ப தொகையை, வெளிநாட்டு நாணயத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் செலுத்த முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறியுள்ளார்.

ஓய்வூதியப் பங்களிப்பைச் செலுத்தும் போது புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் மரணிக்கும் பட்சத்தில் அந்த தொகையை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செலுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர் ஒய்வூதியத் திட்டத்தின் பலன், பயனாளிகளுக்கு வழங்கப்படும் என மனுஷ நாணயக்கார கூறியுள்ளார்.

இந்த ஒய்வூதிய திட்டத்தின் கீழ் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 20 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் வரையான ஒய்வூதியம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.