வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வாகனங்களை உரிமையாளர்களின் பெயர்களில் பதிவு செய்யாமல் இருப்பவர்களுக்கு எதிராக புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

குறித்த தகவலை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்  அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

வாகனம் வாங்கிய 14 நாட்களுக்குள் அது உரிமையாளரின் பெயரில் பதிவு செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு செய்யத்தவறும் பட்சத்தில், ஒரு நாளைக்கு ரூபா 100 வீதம் அபராதம் விதிக்கப்படும் எனவும் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

இந்தப் புதிய திட்டத்தின் கீழ் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்களுக்கான அபராதத் தொகை வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலமாக பதிவு செய்யப்படாத வாகனங்களை அடையாளம் காண திணைக்களத்திற்கு இத்திட்டம் உதவும்.

எனவே வாகன உரிமையாளர்களின் பெயர்களில் பதிவு செய்யாமல் வாகனங்களை கொள்வனவு செய்து பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அனுருத்த வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொழும்பை சுற்றியுள்ள வீதிகள் நேற்று CCTV மூலம் கண்காணிக்கப்பட்டு,125 போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

CCTV கமரா மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் முன்னோடி திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பை சுற்றியுள்ள CCTV மூலம் அவதானிக்கப்பட்டுள்ள 125 போக்குவரத்து விதி மீறல்கள் இனங்காணப்பட்டுள்ளன.