முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஓய்வூதியம், கொடுப்பனவுகள் மற்றும் பாதுகாப்பை நீக்குவதற்கான சமகால அநுர அரசாங்கத்தின் தீர்மானம் நியாயமற்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேமநாத் சி. தொலவத்த, தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குமாறு பொதுமக்களில் யாரும் கோரவில்லை. இது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பாரம்பரியம்.
போர் மற்றும் சமாதானம் தொடர்பான முடிவுகளை எடுக்க மகிந்த ராஜபக்சவுக்கு உரிமை இருந்தபோது, அவருக்கு முன் இருந்த சிறந்த ஜனாதிபதிகள் அந்த முடிவை எடுக்காத நிலை காணப்பட்டது.
உலக நாடுகளின் கடுமையான அழுத்தங்களை பொருட்படுத்தாமல் மகிந்த போரை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இதன் காரணமாக இன்றும் மகிந்த ராஜபக்ச மருந்து வாங்க ஐரோப்பா, அமெரிக்கா அல்லது பிரித்தானியாவுக்கு கூட செல்ல முடியாது நிலை காணப்படுகிறது.
இவ்வாறான நிலையில் அவருக்கான உரிமைகளை சமகால அரசாங்கம் நீக்க முடிவு செய்திருப்பது தவறான செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேநேரம் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் வகையில் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்துக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கை எடுப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர்,
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலக்காகக் கொண்டு விடுதலை புலிகள் அமைப்பை மகிழ்விப்பதற்காக இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காக மாத்திரம் நாங்கள் போராடவில்லை. எதிர்கால ஜனாதிபதிகளுக்காகவும், தேசியத்துக்காகவும் இந்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
இந்த அரசாங்கம் வெறுப்பை மாத்திரம் முன்னிலைப்படுத்திச் செயற்படுகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்த எதிர்வரும் மாதத்துடன் ஒருவருடம் நிறைவடையவுள்ள நிலையிலும் கடந்த அரசாங்களை மாத்திரம் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் கடந்த அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி திட்டங்களை மாற்றமில்லாமல் நிறைவேற்றுகிறார்.
2029 ஆம் ஆண்டு நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம். அப்போது தற்போதைய செயற்பாடுகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க நேரிடும் என்றார்.