புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் குறித்து எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதால் சபையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
முன்னதாக இந்த விடயம் தொடர்பில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் யாசிறி ஜயசேகர
சட்டத்தரணி போன்று ஆடை அணிந்து வந்த ஒருவரே குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். நீதிமன்றத்துக்குள்ளேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நீதிபதிகளுக்கும் சட்டத்தரணிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலைமையே காட்டுகின்றது.
அத்துடன் இது சிறிய விடயம் அல்ல, இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தாமல் விட்டால் பாரிய விளைவை சந்திக்க நேரிடும்.
அத்துடன் இது சிறிய விடயம் அல்ல, இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தாமல் விட்டால் பாரிய விளைவை சந்திக்க நேரிடும்.
எனவே பாதுகாப்பை பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ
பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது.பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதாள குழுக்கள் பணம் தூயதாக்கல், போதைப்பொருள் வியாபாரம், பல சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையது.
பாதாள குழுக்களில் ஈடுபடும் அல்லது ஒழுங்கமைக்கும் தரப்பில் பலர் இலங்கையில் இல்லை. விசாரணைகளை முன்னெடுத்துச் செல்கையில் பாதுகாப்பு தரப்பின் ஒருசில அதிகாரிகள் பாதாள குழுக்களுடன் தொடர்பு கொண்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படை, பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினை கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.ஆகவே பாதாள குழுக்கள் குறித்து அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது என தெரிவித்தார்.
இதன்போது இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச
இது பாரதூரமான நிலைமை நீதிமன்றத்திற்குள்ளேயே தனிநபரின் உயிருக்கு ஆபத்து.
நாளாந்தம் கொலைகள் இடம்பெறுகின்றன. இதற்கு தீர்வை காண்பதற்கு உடனடி தீர்வு அவசியம்.
நாட்டில் சட்டமொழுங்கை பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு உதவுவதற்கு எதிர்கட்சி தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
அனுமதிப்பத்திரமளிக்கப்பட்ட துப்பாக்கிகளை மீண்டும் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா, துபாய் ஆகிய நாடுகளில் தலைமறைவாகியுள்ள பாதாள குழுவினரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விசாரணை அனைத்தையும் பாராளுமன்றத்தில் குறிப்பிட முடியாது. பாதாள குழுவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதேவேளை நாட்டின் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பிற்குக் குறைந்தளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் எங்கும் சுதந்திரமாகப் பயணிக்க முடியும் எனவும் அரசாங்கம் தெரிவித்தது.
இவ்வாறு அரசாங்கம் குறிப்பிட்டு ஓரிரு நாட்களில் கொலைச் சம்பவங்களே அரங்கேறியுள்ளன.
இதன்போது நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பத்தை சுட்டிக்காட்டி நாமல் ராஜபக்ஷ இன்றைய தினம் நீதிமன்றத்திற்குள் நீதிபதியின் முன்பே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
உயிரிழந்தவரின் நடத்தை எவ்வாறு இருப்பினும் நீதிமன்றத்திற்குள் இவ்வாறான அசம்பாவிதங்கள் அரங்கேறுவது பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடாகும்.
மேலும் நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.